![principal scientific advisor](http://image.nakkheeran.in/cdn/farfuture/ykDOduNYGzP5IXMKwyP5N3v6eVbWI8X9DTXwyW6Dq-4/1620216715/sites/default/files/inline-images/qfqf.jpg)
இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனையில் படுக்கைகள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நிலைமை மோசமடைந்துள்ளதால் அமெரிக்கா, இஸ்ரேல், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்டவற்றை அனுப்பி உதவி வருகின்றன.
இந்தநிலையில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கரோனா புதிய அலைகளை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கூறியவை, "மாற்றமடைந்த புதிய வகை கரோனா, அசல் கரோனா வைரஸை போலவே பரவுகிறது. புதிதாக எந்தப் பரவும் பண்பையும் அவை கொண்டிருக்கவில்லை. தடுப்பூசிகள், தற்போதுள்ள மரபணு மாற்றமடைந்த கரோனாக்களுக்கு எதிரான செயல்திறன் மிக்கவை. மரபணு மாற்றமடைந்த புதிய வகை கரோனாக்கள் உலகம் முழுவதும் தோன்றும். இந்தியாவிலும் அவை தோன்றும். இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள், இதுபோன்ற புதிய வகை கரோனா வைரஸ்களை முன்கூட்டியே எதிர்பார்த்து அதற்கு எதிராக தீவிரமாகச் செயலாற்றுகிறார்கள். கரோனாவின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. ஆனால் எப்போது மூன்றாவது அலை ஏற்படும் எனத் தெளிவாக தெரியவில்லை. நாம் கரோனாவின் புதிய அலைகளை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்" இவ்வாறு மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.