வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒருவருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நவம்பர் 19ஆம் தேதி அறிவித்தார். அதன்படி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. அதனைத்தொடர்ந்து நேற்று (01.12.2021) குடியரசுத் தலைவர் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் அதிகாரபூர்வமாக நேற்று மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் பற்றிய தரவுகள் குறித்தும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "வேளாண் அமைச்சகத்திடம் இந்த விவகாரத்தில் (விவசாயிகள் இறப்பு) எந்தப் பதிவும் இல்லை. எனவே (இழப்பீடு வழங்குவது குறித்து) கேள்வி எழவில்லை" என தெரிவித்தார்.
இதற்கு விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்திவரும் விவசாய சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கண்டனம் தெரிவித்துள்ளது. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளைப் பற்றிய தரவுகள் இல்லை என கூறுவதன் மூலம் மத்திய அரசு விவசாயிகளின் உயிர்த் தியாகத்தை தொடர்ந்து அவமதித்துவருவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேலும், விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடும், மறுவாழ்வுக்கான வழிவகையும் செய்து தரப்படாவிட்டால், டெல்லி எல்லையில் போராட்டம் தொடரும் என்றும், இந்தப் போராட்டங்களில் அதிக ட்ராக்டர்கள் பங்கேற்கும் எனவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா எச்சரித்துள்ளது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த பிரதமர் மோடி, குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவகாரங்களை ஆராய விஞ்ஞானிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதன்தொடர்ச்சியாக இந்தக் குழுவில் சேர்க்க விவசாயிகளின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய அரசு சம்யுக்தா கிசான் மோர்ச்சாவைக் கேட்டுக்கொண்டது.
இந்தநிலையில், விவசாயிகளைக் குழுவில் சேர்ப்பது குறித்து மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்காதவரை, குழுவில் இணைக்க விவசாயிகளின் பெயர்களைப் பரிந்துரைக்கப்போவதில்லை எனவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு, (குழுவிற்காக) அனுப்ப வேண்டிய விவசாய தலைவர்களின் பெயர்களை நாங்கள் முடிவுசெய்துவிட்டோம். ஆனால், இன்றுவரை அரசாங்கம் எழுத்துப்பூர்வ தகவல் அனுப்பவில்லை. இந்தக் குழு எதைப் பற்றியது, அதன் உரிமை என்ன என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அத்தகைய விவரங்கள் இல்லாத நிலையில் நாம் மேற்கொண்டு எதையும் செய்ய முடியாது" என கூறியுள்ளது.