Skip to main content

இன்னைக்கு முடியாது.... சித்தராமையா தெளிவு

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று (18/07/2019) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல், அவையில் ஏற்பட்ட தொடர் அமளியால் துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி அவையை இன்று (19/07/2019) காலை 11.00 மணிக்கு ஒத்திவைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவின் மாநில தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தும் வரை சட்டப்பேரவையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறினார்.
 

sidharamaiya

 

 

அதனைத் தொடர்ந்து எடியூரப்பா தலைமையிலான பாஜக எம்.எல்.ஏக்கள், இரவு உணவை சட்டப்பேரவை வளாகத்தில் அருந்தி, அங்கேயே உறங்கினர். சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் உறங்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.ஏற்கனவே ஆளுநர் வஜூபாய் வாலா நேற்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவுரை வழங்கிய நிலையில், ஆளுநர் உத்தரவை சபாநாயகர் ஏற்காததால், ஆளுநர் மீண்டும் முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
 

அந்த கடிதத்தில் இன்று (19/07/2019) மதியம் 01.30 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு கெடு விதித்துள்ளார்.
 

இந்நிலையில் ஆளுநரின் வலியுறுத்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி மனு அளித்துள்ளார். 
 

காலை 11 மணியளவில் சட்டசபை தொடங்கிய நிலையில் குமாரசாமி பேச தொடங்கினார். தற்போது ஆளுநர் கொடுத்த கால கெடுவும் முடிந்த நிலையில் விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பேசுகையில், “ தற்போதும் விவாதம் முடியவில்லை. மேலும் 20 உறுப்பினர்கள் விவாதத்தில் பேச காத்திருக்கிறார்கள். அதனால் இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது. திங்கள்கிழமை வரை இந்த விவாதம் தொடரும்” என்று கூறினார். 


 

சார்ந்த செய்திகள்