மக்கள் கொல்லப்பட்டிருக்கும் நேரத்தில் காப்பருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதா? என சத்குருவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்த ஜக்கி வாசுதேவ், காப்பர் உருக்காலை விஷயத்தில் நான் ஒரு நிபுணர் அல்ல. ஆனால் இந்தியா மிகப்பெரிய அளவில் காப்பர் பயன்பாட்டை கொண்டுள்ளது என்பது எனக்கு தெரியும்.
நமக்கு தேவையான காப்பரை நாமே உற்பத்தி செய்யாவிட்டால், நாம் சீனாவிடம் இருந்துதான் அதனை வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீறல்கள் என்பது சட்டப்பூர்வமாக வெளிப்படையாக பேசப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பதிவில், முதலமைச்சர் அலுவலகம் ஒரு வெட்கக்கேடு. யோகவை பற்றி பேசும் பிரதமருக்கு இதனைப் பற்றி பேச நேரமில்லை. காப்பரின் தேவைகள் குறித்து பேச இது சரியான நேரமில்லை. போலீசால் மக்கள் சூட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் சுடுவது என்பது கொலை. தற்போது நடந்த படுகொலை குறித்து பேசுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.