ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கேதாவரம் கிராமத்தில் உள்ள குகை ஓவியங்களை யுனெஸ்கோ பொறுப்பில் ஒப்படைக்க அதிகாரிகள் தீவிரமாக திட்டமிட்டு வருகிறார்கள்.
அடுத்த ஆண்டு இந்தக் குகை ஓவியங்கள் யுனெஸ்கோ வசம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கேதாவரம் குகைகளில் மான்கள், காளைகள், நரிகள், முயல்கள், மனிதர்கள் என ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்கள் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பழைய கற்காலத்தை சேர்ந்தவை என்று கருதப்படுகிறது. பழைய கற்காலம் என்பது சுமார் 33 லட்சம் ஆண்டுகளில் இருந்து 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரை என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இவ்வளவு அபூர்வமான குகை ஓவியங்களை பார்வையிட நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். யுனெஸ்கோவிடம் ஒப்படைப்பதற்கு முன் கிராமத்துக்கு போக்குவரத்து வசதிகளை செய்ய வேண்டும். அதற்கான திட்டங்கள் வேகமாக நிறைவேற்றப்படுகின்றன என்று அதிகாரிகள் கூறினார்கள்.