மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20 என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில், நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில், ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜ.க கூட்டணியும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம், அகோலாவில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். குறிப்பாக, கர்நாடகா காங்கிரஸ் அரசு மீது பணமோசடி குற்றச்சாட்டையும் முன்வைத்தார். அங்கு நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, “மகாராஷ்டிராவில் தேர்தல் என்ற பெயரில், கர்நாடகாவில் பணம் பறிப்பு இரட்டிப்பாகியுள்ளது. மகாராஷ்டிராவில் தேர்தல் நடக்கும்போது, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ், மதுபானக் கடைகளில் ரூ.700 கோடியை மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன” என்று கூறினார்.
பிரதமர் மோடி வைத்த குற்றச்சாட்டை கர்நாடகா முதல்வர் சித்தராமையா மறுப்பு தெரிவித்து சவால் விடுத்துள்ளார். கர்நாடகா மாநிலம், ஹவேரி மாவட்டம் ஷிக்கான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “இந்த நாட்டின் பிரதமர் இவ்வளவு பொய் சொல்வதைக் கண்டு ஆச்சரியமடைகிறேன். மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு அனுப்பவும், இடைத்தேர்தலுக்கு செலவு செய்யவும் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கலால் துறை மூலம் ₹700 கோடி வசூலித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகளை அவர் நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஒருவேளை அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் நீங்கள் ஓய்வு பெற வேண்டும். நரேந்திர மோடிக்கு இன்று நான் சவால் விடுகிறேன்” என்று கூறினார்.