காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரைத் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்திய நிலையில், தமிழகத்தில் விவசாய அமைப்புகள், விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும்; தமிழகத்திற்குக் காவிரியில் நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல கர்நாடகாவில், தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திற்குக் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த கடையடைப்பு காரணமாகத் தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள் தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் அத்திப்பள்ளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கும், பந்த் நடத்துவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், ஊர்வலம் நடத்துவதற்கோ பந்த் நடத்துவதற்கோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, 144 பிரிவின் கீழ் அனைத்து பகுதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டத்தை யாரும் தங்களது கைகளில் எடுக்கக்கூடாது என்பதையும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதையும் நோக்கமாகக் கொண்டு தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.