தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்குள் வர வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் கூறியதை கர்நாடகா முதல்வர் சித்தராமையா நினைவு கூர்ந்தார். சமூக சீர்திருத்தவாதி நாராயண குருவின் 169வது பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூர் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒரு முறை நான் கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தேன். அப்போது, கோவில் நிர்வாகிகள் என்னிடம் எனது சட்டையை கழட்டிவிட்டு கோவிலுக்குள் வருமாறு கூறினார்கள். ஆனால், நான் சட்டையைக் கழட்டிவிட்டு கோவிலுக்குள் வரமாட்டேன். நான் கோவிலுக்கு வெளியே நின்றே சாமி தரிசனம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அதே நேரத்தில் அவர்கள் எல்லாரிடமும் சட்டையைக் கழட்ட சொல்ல வில்லை. மாறாக சில பேரிடம் மட்டும் தான் அப்படி சொன்னார்கள். இது தான் மனிதாபிமானமற்ற நடைமுறையாகும். கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்” என்று கூறினார்.