கர்நாடகத்தின் முதல்வராக மீண்டும் சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாஜகவை வீழ்த்தி இழந்த ஆட்சியை காங்கிரஸ் கட்சி மீட்டெடுத்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தின் முதல்வர் யார் என்பதில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரிடையே போட்டி நிலவியது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா இருவரையும் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கார்கே இருவரிடமும் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரும் ராகுல் காந்தியை நேற்று அவரது இல்லத்தில் தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இப்படி பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போது கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும் துணை முதல்வராக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த முதல்வர் இருக்கை குறித்த போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேலும், நாளை மறுநாள் (20.05.2023) பெங்களூருவில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.