மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா முதல்வராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து 3 கட்சிகள் சார்பிலும் தலா 2 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரசின் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால், காங்கிரசின் பாலசாகேப் தோரட், நிதின் ராவத் ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்று கொண்டனர். இதனையடுத்து உத்தவ் தாக்கரே நேற்று முறைப்படி முதல்வர் அலுவலகத்திற்கு சென்று அங்கு முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.
இந்த கூட்டம் தொடங்கப்பட்டது முதல் தொடர் அமளியில் ஈடுபட்ட பாஜகவினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து பெரும்பான்மைக்கு 145 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், உத்தவ் தாக்கரே அரசுக்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சுயேட்சைகள் உட்பட 169 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். எ.ஐ.எம்.ஐ.எம் (2) சி.பி.ஐ.எம் (1) மற்றும் எம்.என்.எஸ் (1) ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் வாக்குகள் அளிக்கவில்லை.