மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இருகட்சிகளும் சரிசமமான எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடுவதாக ஏற்கனவே பேசப்பட்டது. ஆனால் மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனாவை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றதால், சட்டசபை தேர்தலில் பாஜக கூடுதலான இடங்கள் வேண்டும் என்ற முடிவில் பிடிவாதமாக இருந்து வந்தது. இதன் காரணமாக இருகட்சிகளுக்கும் இடையேயான தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழுந்தது.
மஹாராஷ்ட்ரா மாநில பாஜக தலைமை கூடுதலான இடம் வேண்டும் என்ற முடிவில் விடாப்பிடியாக இருந்ததால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியிலேயே இருந்தது. இதன் காரணமாக மும்பை வர இருந்த அமித்ஷாவின் பயணமும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பாரதிய ஜனதா 144 இடங்களிலும், சிவசேனா 126 இடங்களிலும் போட்டியிட ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிவசேனாவுக்கு துணை முதலமைச்சர் பதவியைத் தரவும் பாஜக ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 18 தொகுதிகள் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பாஜக,சிவசேனா இடையே ஏற்பட்ட இந்த உடன்படிக்கையால் இருகட்சிகளின் முதல்நிலை தலைவர்களும் நிம்மதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.