
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம்(நவம்பர்) 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் பாஜகவும், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று முயற்சியில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையே பிரச்சார களத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் பெண்களுக்கு எதிராக நடந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். நவராத்திரி விழாவில் பேசிய அவர், “பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; ஒரு போதும் அவர்கள் தப்ப முடியாது. தேவைப்பட்டால் அதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் சொத்துகள் புல்டோசர்களை கொண்டு இடித்துத் தள்ளப்படும்” என்றார்.