பிரதமர் மோடி விவசாயிகளின் கடவுள் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகள் தரப்பில் 24 முதல் 26-ம் தேதி வரை, ரயில் மறியல் போராட்டங்கள் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், நேற்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்தவும் பல்வேறு விவசாயச் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இதன்படி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய அளவிலான போராட்டங்களும் நடைபெற்றன. விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி விவசாயிகளின் கடவுள் என பாஜகவைச் சேர்ந்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "மூன்று வேளாண் சீர்திருத்த மசோதாக்கள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும். இந்த மசோதாக்களை எதிர்ப்பவர்கள், விவசாயிகளுக்கு எதிரானவர்கள். இடைத்தரகர்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் இம்மசோதாக்களை எதிர்க்கிறார்கள். விவசாயிகளுக்கு நலன் பயக்கும் தொலைநோக்கான முடிவுகளை எடுக்கும் பிரதமர் விவசாயிகளின் கடவுள். விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பான மூன்று மசோதாக்களும் விவசாயிகளுக்கு அவர் வழங்கிய ஆசீர்வாதம். இந்த மசோதாக்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளின் நலம் விரும்பிகள் அல்ல, அவர்கள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகிறார்கள். விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கோதுமை மற்றும் அரிசியைக் கொள்முதல் செய்தால் இடைத்தரகர்கள் தேவையில்லை. அப்படியானால் எதிர்க்கட்சிகள் ஏன் இந்த இடைத்தரகர்களை ஆதரிக்கின்றன? எதிர்க்கட்சிகள் பிரதமரை எதிர்க்கவில்லை, மாறாக விவசாயிகளின் நலன்களைக் கண்மூடித்தனமாக எதிர்க்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.