மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (03/07/2022) தொடங்கும் நிலையில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு சிவசேனாவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோவாவில் இருந்து நேற்று (02/07/2022) இரவு மும்பை வந்தடைந்தனர்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியதால், மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. மற்றும் ஷிண்டே ஆதரவு சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஆட்சி அமைத்துள்ளனர். இந்த நிலையில், கோவாவில் தங்கியிருந்த தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை ஷிண்டே, மும்பைக்கு நேற்று இரவு விமானம் மூலம் அழைத்து வந்தார்.
அதைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் தலைமையில் ஷிண்டே ஆதரவு சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில், சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று (03/07/2022) நடைபெறும் சபாநாயகர் தேர்தல், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் இவர்கள் பங்கேற்று வாக்களிக்க உள்ளனர்.