குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களோடு சேர்ந்து மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் ரெட் ரோட்டில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சிலையிலிருந்து தொடங்கி ஜோராசங்கோ தாகுர்பாரி வரை பிரமாண்ட பேரணி நடத்தப்படுகிறது. இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த பேரணியின் போது பேசிய அவர், "பாஜக மட்டுமே இங்கு நிலைத்திருக்க வேண்டுமென நினைக்கிறது. மற்ற அனைவரையும் அவர்கள் வெளியேறச் செய்வார்கள். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இந்தியா அனைவருக்கும் உரியது. டெல்லி முதல்வர் இந்த திட்டத்தை அனுமதிக்கப்போவதில்லை என கூறியிருக்கிறார். மத்தியப்பிரதேச முதல்வர், பஞ்சாப் முதல்வர், சத்தீஸ்கர், கேரளா முதல்வர் ஆகியோரும் இதனை அனுமதிக்கப்போவதில்லை என கூறியுள்ளனர். இதே போல அனைவரும் கூற வேண்டும்" என தெரிவித்தார்.