மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் நேற்று தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நேற்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கோலாப்பூரில் பேசிய அவர், "பதவிக்கு வந்து 100 நாட்களுக்குள் கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வரவில்லையென்றால் என்னை பொது இடத்தில் தூக்கில் போடுங்கள் என்று மோடி கூறினார். ஆனால் கறுப்புப் பணம் வெளியே வரவில்லை. பொது இடத்தில் யாரும் தூக்கில் தொங்கவேண்டுமென்பதில் நம் எவருக்கும் ஆர்வம் இல்லை என்றாலும், அவரின் வாக்குறுதி என்னவாயிற்று என்பதுதான் கேள்வி.
அதேபோல மத்திய அமைச்சர் உமா பாரதி டிசம்பர் 2017-ல் கங்கையை சுத்தம் செய்யப்போவதாக அறிவித்தார். அதையும் ஞாபகப்படுத்துகிறேன். அந்த திட்டத்தை அக்டோபர் 2018 வரை கூட தொடங்கவில்லை. புனித நதியின் தூய்மை கெட்டுப்போய் உள்ளது. ஆனால் சுத்தம் செய்யும் எண்ணமே அவர்களுக்கு இல்லை.
பாஜக அரசு மக்களை முட்டாளாக்கி வருகிறது. விவசாயிகள் மற்றும் ஏழைகள் தொடர்பாக எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் இருக்கும் இந்த அரசு பதவியில் இருக்க எந்த உரிமையும் இல்லை'' என அவர் கூறினார்.