கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்ததால், அண்மையில் அந்த மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது மீண்டும், கரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அளிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "1000 பேர் உள்ள இடத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற பகுதிகளில் உள்ள கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணிவரை இயங்க அனுமதிக்கப்படும் எனவும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கேரள அரசு, ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 22 (ஓணம்) ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது எனவும், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் அதிகபட்சம் 20 பேர் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும், ஐசியுவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இதற்கு நோயின் தீவிரத்தன்மை குறைகிறது என்பது பொருள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கேரளாவிற்கு சென்ற மத்தியக் குழு தன்னிடம் அறிக்கை சமர்ப்பித்ததாகவும், கேரளாவில் கரோனா அதிகரித்து வருவது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் பேசியதாகவும் கூறியுள்ளார்.