உத்தரப்பிரதேசம் மருத்துவர் கஃபீல் கான் உட்பட ஏழுபேர் கைது!
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரின் பிஆர்டி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் உட்பட ஏழு பேர் மீது வழக்கு தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அம்மாநில அரசு.
உபி கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் மூளைவீக்க நோயாளிகள் பிரிவில், சிகிச்சை பெற்று வந்த 30 குழந்தைகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 70ஆக உயர்ந்தது. இந்த தொடர் மரணங்களுக்கு பொறுப்பேற்று அம்மருத்துவமனையின் தலைவர் ராஜீவ் மிர்ஷா பதவி விலகினார்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் குறைபாட்டால் தான் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், நாடு முழுவதும் இந்த செய்தி அரசியல் சூழலில் வெப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மருத்துவர் கஃபீல்கான் மற்றும் மேலும் ஆறு பேரின் மீது பிணையில் வெளியில் வரமுடியாத வழக்கு பதிந்து கைது செய்ய உத்தரவிட்டது அம்மாநில அரசு. இதையடுத்து மருத்துவர் கஃபீல்கான் உள்ளிட்டோரை நேற்று காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த வழக்கில் கஃபீல்கான் மூன்றாவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் மருத்துவக்கல்லூரியின் தலைவர் ராஜீவ் சர்மா மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோரக்பூர் மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உயிரிழப்புகளின் 400ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1300ஐ தாண்டும் என பிஆர்டி மருத்துவமனையின் அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.
- ச.ப.மதிவாணன்