
இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம், தற்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுவரும் ‘நோவாவக்ஸ்’ என்ற கரோனா தடுப்பூசியை இந்தியாவில் ‘கோவோவாக்ஸ்’ என்ற பெயரில் தயாரிக்க தொடங்கியுள்ளது. நோவாவக்ஸ் தடுப்பூசிக்கு இன்னும் எந்த நாட்டிலும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. அதேசமயம் நோவாவாக்ஸ் நிறுவனம், தங்களது தடுப்பூசியின் சோதனை தரவுகளை ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளது.
மேலும், அவ்வாறு சோதனை முடிவுகளைப் பகிர்ந்துகொண்ட நாடுகளிடம், ஜூலையிலிருந்து செப்டெம்பருக்குள் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கவும் நோவாவாக்ஸ் முடிவெடுத்துள்ளது. இந்திய அரசின் மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளில் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்பதால், அந்த நாடுகளில் நோவாவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்படுவதை வைத்து, இந்தியாவில் உடனடியாக கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி பெற சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இருப்பினும் கோவோவாக்ஸ் தயாரிப்பில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இந்த தடுப்பூசிக்கான மூலப்பொருட்கள் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும். ஆனால், தற்போது அமெரிக்கா கரோனா தடுப்பூசி மூலப்பொருட்களுக்கான ஏற்றுமதியை தடை செய்துள்ளது. இதனால் கோவோவாக்ஸை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தன்னிடம் இருக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு கோவோவாக்சை தயாரிக்க தொடங்கியுள்ள சீரம், தடுப்பூசி மூலப்பொருட்களுக்காக அமெரிக்க அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதனை சீரம் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.