இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகின்றன. ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம், ஸ்புட்னிக் V தடுப்பூசியைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்புட்னிக் V தடுப்பூசியைத் தயாரிக்கும் முயற்சியின் முதல் படியாக சீரம் நிறுவனம், ஸ்புட்னிக் தடுப்பூசியை பகுப்பாய்வு செய்ய, சோதனை உரிமம் கேட்டு இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பனசியா பயோட் என்ற இந்திய நிறுவனம் ஸ்புட்னிக் V உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியுள்ளது. மேலும், ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டி லேபரேட்டரிஸ் நிறுவனமும் ஸ்புட்னிக் V தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.