இந்தியாவால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பஞ்சாப்பில் இருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த நிஜ்ஜார் தலைமையிலான காலிஸ்தான் பயங்கரவாதிகள், தனி நாடு கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவரது படுகொலைக்கு, இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்க, அதற்கு இந்தியா மறுத்து கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது கனடா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடந்த 14ஆம் தேதி புகார் அளித்தது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்தது. மேலும், இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் 6 பேர் வெளியேற்றி, இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் உள்ளிட்ட இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பால் வெளியிடப்பட்ட வீடியோவில், வன்முறை நிறைந்த இந்துத்துவா சித்தாந்தத்தின் பிறப்பிடமான அயோத்தியின் அடித்தளம் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, சீக்கிய இனப்படுகொலையின் 40வது ஆண்டு நினைவு ஆண்டை முன்னிட்டு, நவம்பர் 1ஆம் தேதி முதல் 19 தேதி வரை ஏர் இந்தியா விமானம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அந்த விமானங்களில் யாரும் பயணிக்க வேண்டும் என்று காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.