பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், துணை ராணுவப்படை மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலில் 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகின்ற நிலையில், இரண்டாவது கட்ட தேர்தல் நவம்பர் 3- ஆம் தேதியும், மூன்றாவது கட்ட தேர்தல் நவம்பர் 7- ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
கரோனாவால் ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்ச வாக்காளர்களின் எண்ணிக்கை 1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 80 வயதுக்கு மேற்பட்டோர், கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு, மாற்று நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 10- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படவுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
நாட்டின் கரோனா பொது முடக்க சூழலுக்குப் பிறகு முதல்முறையாக தேர்தல் நடைபெறுவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.