Skip to main content

11,000 புள்ளிகளை நோக்கி நிப்டி! இறங்கினால் முதலீடு; ஏறினால் விற்றுவிடலாம்!!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

sensex, nifty points mumbai sharemarket

 

பங்குச்சந்தைகளில் கடந்த வாரம் பலரின் கணிப்புகளையும் தகர்த்து, இந்தியப் பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றத்துடன்தான் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தன. கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான நம்பகமான தரவுகளும் கூட சந்தை ஏற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

 

தேசிய பங்குச்சந்தையான நிப்டி- 50, தொடர்ச்சியாக மூன்றாவது லாபகரமான வாரத்தை நிறைவு செய்திருந்தது. ஜூலை 3- ஆம் தேதியன்று முடிவுற்ற மும்பை பங்குச்சந்தை பி.எஸ்.இ. மற்றும் எஸ் அன்டு பி சென்செக்ஸ் குறியீடு 2.4 சதவீதம் வரை உயர்ந்து இருந்தது.

 

''பொருளாதார தரவுகளை விட, சந்தைகளின் கள நிலவரங்களின் யதார்த்தங்கள் பெரும்பாலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை நோக்கியே நகர்கின்றன. இன்ட்ராடே வணிகத்தைப் பொருத்தவரை, சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என்கிறார் ஜியோஜித் நிதி சேவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் வினோத் நாயர். 

 

சந்தையில் இப்போதும் நிலையற்றத் தன்மையே நிலவுவதால், நிப்டியில் இன்றைய (ஜூலை 6) வர்த்தகம் 10,569 புள்ளிகள் முதல் 10,531 புள்ளிகள் வரை இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ஒருவேளை, இன்றைக்கும் ஏற்றத்தில் இருக்கும்பட்சத்தில் 10,638 - 10,669 என்ற வரை உயர்வு இருக்கலாம் என்கிறது மணிகன்ட்ரோல் பங்குத்தரகு நிறுவனம்.

 

அதேநேரம், எல்.கே.பி. செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ரோஹித் சிங்கர், இன்று அல்லது நடப்பு வாரத்தில் நிப்டி 10,700 முதல் 10,800 புள்ளிகளைக் கடக்கலாம் என்கிறார். வர்த்தகம் ஏற்றத்தில் இருக்கும்போது முதலீட்டாளர்கள் லாபத்தை புக்கிங் செய்வது நல்லது என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

 

மோதிலால் ஆஸ்வால் பங்குத்தரகு நிறுவனமும், 10,800 புள்ளிகளை நோக்கி நிப்டியின் வர்த்தகம் நகரக்கூடும் என கணித்துள்ளது. ஒருவேளை, இறங்குமுகமாக இருந்தால் நிப்டி 10,450 - 10,333 புள்ளிகள் வரை சரியக்கூடும் என்கிறார் இந்நிறுவனத்தின் சந்தன் தபாரியா.

 

கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனமோ, நிப்டியின் ராஜநடை 11,000 புள்ளிகளை நோக்கிச் செல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது. சரிவு காணும்பட்சத்தில் 10,500 - 10,470 புள்ளிகளாக இருக்கலாம். அந்தளவுக்குச் சந்தையில் சரிவு இருக்கும்போது லாபகரமான பங்குகளில் தாராளமாக முதலீடு செய்யலாம் என்றும் அந்நிறுவனதின் சந்தை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் சவுகான் கூறுகிறார்.

 

கடந்த வாரத்தில் நிப்டி ஏற்றத்திற்கு பெரிதும் துணைபுரிந்த வங்கிப் பங்குகள் கடைசி நாளன்று (ஜூலை 3) 0.46 சதவீதம் வரை சரிந்து, 21,852.40 புள்ளிகளில் முடிவடைந்தன. இன்று வங்கி பங்குகளின் ஆதரவுப் புள்ளிகள் 21,703 - 21,554 என்ற அளவில் இருக்கலாம் எனக் கணித்துள்ளனர் சந்தை ஆய்வாளர்கள். அல்லது, வங்கிப் பங்குகள் ஏற்றம் பெற்றால் 22,065 புள்ளிகள் முதல் 22,279 புள்ளிகள் வரையிலும் கூட செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 

http://onelink.to/nknapp

 

இன்று காலாண்டு முடிவுகள் வெளியிடும் நிறுவனங்கள்:

 

என்.பி.சி.சி. (இண்டியா), சத்பவ் இன்ப்ராஸ்ட்ரக்சர் புராஜக்ட், பிசிஎல் இண்டஸ்ட்ரீஸ், பி.எம்.டபுள்யூ இண்டஸ்ட்ரீஸ், போடல் கெமிக்கல்ஸ், டி.சி.டபுள்யூ, டைனமிக் இண்டஸ்ட்ரீஸ், ஐ.எப்.பி. அக்ரோ இண்டஸ்ட்ரீஸ், ஐ.எப்.பி. இண்டஸ்ட்ரீஸ், ஜே.எம்.டி. வென்ச்சர்ஸ், நைசா கார்ப்பரேஷன், வெல்கியூர் டிரக்ஸ் அன்டு பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஜனவரி- மார்ச் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இந்நிறுவனங்களின் வளர்ச்சியைப் பொருத்து இந்நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு கிடைக்கப் பெறலாம்.

 

 

 

சார்ந்த செய்திகள்