
அமெரிக்காவிற்கு இரண்டு பயணமாக பிரதமர் மோடி சென்றார். அங்கு, அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்டை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தீவிரவாத ஒழிப்பு, சைபர் பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அந்நாட்டுத் தொழிலதிபர் எலான் மஸ்க்கை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக, பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார்.
அப்போது இரு தலைவர்களும் வரிக்கொள்கை, எண்ணெய், எரிசக்தி, அணுசக்தி, சட்டவிரோத குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களை, இந்தியாவிற்குத் திரும்ப அழைக்கப் பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், சட்டவிரோத குடியேற்றம் குறித்து பிரதமர் மோடியின் நிலைப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடியுடனான இந்தச் சந்திப்பு நம்பிக்கைக்குரியது. வரிகளில் பரஸ்பரமில்லாத சூழல் இருந்த நிலையில், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஒப்புக்கொண்டது ஒரு நேர்மறையான அறிகுறி.

இந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் இந்தப் பேச்சுவார்த்தை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஒரு நல்ல விளைவு என்று நான் நினைக்கிறேன், இல்லையெனில், வாஷிங்டனில் சில அவசர முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம், அது நமது ஏற்றுமதியைப் பாதித்திருக்கும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆவணமற்ற இந்திய குடியேறிகளின் நடத்தை கவனிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.