ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண வைக்கப்பட்டுள்ள நிலையில் 275 பேரில் 88 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை அடையாளம் காண சடலங்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இணையதளங்களிலும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த துயரமான நேரத்தில் ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு என்னால் முடிந்த கல்வி அறிவு கொடுப்பதுதான். சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியில் இந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன். மேலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மருத்துவக் குழுவினருக்கும் ரத்த தானம் செய்ய முன்வந்தவர்களுக்கும் எனது சல்யூட். நாம் இதில் ஒன்றாக இருக்க வேண்டும்” என ட்விட் செய்துள்ளார்.