லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.பி.முகமதுபைசல். இவர் பி.சாலிக் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த லட்சத்தீவு நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பி.பி.முகமதுக்கு 10 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து பி.பி.முகமது பைசலின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் பி.பி.முகமது பைசல் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த மார்ச் மாதம் கேரள உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, மேல் விசாரணைக்காக லட்சத்தீவு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவரது எம்.பி பதவி மீண்டும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 3 ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தில் வந்தபோது லட்சத்தீவு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து லட்சத்தீவு நாடாளுமன்ற செயலகம் பி.பி.முகமது பைசலைப் பதவி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் இரண்டாவது முறைக்காக பி.பி.முகமது பைசல் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.