நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று முன்தினம் (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக ஆந்திராவில் நாடாளுமன்றத்துக்கான நான்காம் கட்டத் தேர்தல் வருகிற 13 ஆம் தேதி (13.05.2024) நடக்கிறது. இந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்தோடு சேர்த்து ஆந்திர சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மறுநாளோடு (11.05.2024) நான்காம் கட்டத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்கிறது.
அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் என்.டிஆர். மாவட்டத்தில் உள்ள கரிகாபாடு சோதனைச் சாவடியில் என்.டி.ஆர். மாவட்ட போலீஸார் ரூ.8 கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தனி ரகசிய அறையில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து குண்டூருக்கு பணம் கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து ஜக்கையாபேட்டை வட்ட காவல் ஆய்வாளர் சந்திரசேகர் கூறுகையில், “பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தொகையை மாவட்ட தேர்தல் ஆய்வுக் குழுக்களிடம் ஒப்படைப்போம். தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் பறக்கும்படை குழுவினர் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஆந்திராவில் நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் போட்டியிடும் பித்தாபுரம் தொகுதியில் ரூ. 17 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. ஏ.டி.எம்-ல் பணம் நிரப்பும் வாகனத்தில் கடத்திச் சென்றபோது கொல்லப்ரோலு சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். விசாகப்பட்டினத்தில் இருந்து காக்கிநாடாவிற்கு தங்கம் கொண்டு செல்வது விசாரணையில் தெரிய வந்தது. இதே வாகனத்தில் கடந்த மாதம் 13 ஆம் தேதி ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திச் சென்று பிடிபட்ட நிலையில், மீண்டும் அதே வாகனத்தில் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.