ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாலர் ஆதார் அட்டை திட்டத்தை இந்திய தனித்துவ அடையாளத்திற்கான ஆணையம் வெளியிட்டுள்ளது.
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆதார் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தியது. அனைத்து நல உதவித் திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பாலர் ஆதார் என்ற பெயரில் ஆதார் அட்டைகளை வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. குழந்தைகளுக்கு ஆதார் வாங்க பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார் விவரங்கள் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாலர் ஆதார் அட்டை நீல நிறத்தில் இருக்கும்.
குழந்தை ஐந்து வயதை எட்டிய பிறகு, கருவிழி, கைரேகை உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்து ஆதார் அட்டையை புதுப்பிக்கவேண்டும். குழந்தைக்கு 15 வயது நிரம்பும்போது மீண்டும் ஆதார் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். இவையனைத்தும் ஆதார் சேவை மையங்களில் இலவசமாக செய்து தரப்படும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.