சிவகாசி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தப் பட்டாசு ஆலையில் பல்வேறு ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆலையில் ஆண் மற்றும் பெண் எனப் பலரும் பணிப்புரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அதிகப்படியான வெப்பத்தால் பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வு ஏற்பட்டு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடி விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வெடி விபத்தில் உயிரிழந்த எட்டு பேர் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த இரங்கல் செய்திக் குறிப்பில், 'வெடி விபத்தில் ஐந்து பெண்கள், மூன்று ஆண்கள் உட்பட எட்டு தொழிலாளர்கள் இறந்த செய்தியால் வேதனை அடைந்தேன். உடனே ஆட்சியரைத் தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். காயமடைந்த 10 க்கும் மேற்பட்டோருக்கு அனைத்து உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிப்பதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.