தமிழ்நாட்டில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதத் தகுதி பெற்றிருந்தனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெற்றது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.
இதனையடுத்து 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் எழுதிய தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று முடிந்தன. அதனைத் தொடர்ந்து மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது. இத்தகைய சூழலில் இந்த பொதுத் தேர்வை எழுதிய அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர். மேலும் இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் வெளியிடுதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள், சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் நாளை (10.05.2024) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https//results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம்.
தேர்வர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை காலை 9.30 மணிக்கு அறிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.