வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 180 இடங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இத்தகைய சூழலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். தடையற்ற குடிநீர் வழங்க போதுமான ஜெனரேட்டர்களையும் வைத்திருக்க வேண்டும். தங்கு தடையின்றி ஆவின் பால் பொருட்களின் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். முன்கூட்டியே மக்களை அங்குத் தங்க வைக்க வேண்டும். முக்கிய பொருட்கள், ஆவணங்களை நீர் புகார் வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். கனமழை எச்சரிக்கை இருப்பதால் பொதுமக்கள் சுற்றுலாத் தலங்கள், நீர் நிலைகளுக்குச் செல்ல வேண்டாம். மின் உற்பத்தி, மின் விநியோகம் சீராக இருக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மழையளவு, அணைகளின் நீர்வரத்தைக் கண்காணித்து நீர் மேலாண்மை செய்ய வேண்டும். சாலைப் பணிகள் நடக்கும் இடங்களில் ஒளிரும் பட்டைகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும்” என பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்.
அதே சமயம் சென்னையில் நாளை நடைபெற இருந்த பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதாவது தாவரவியல், விலங்கியல், வேதியியல் மற்றும் இயற்பியல் துறை மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி வரும் 21ஆம் தேதி இந்த கலந்தாய்வு நடைபெறும் எனக் கல்லூரிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.