கர்நாடக மாநிலம் அப்சல்பூர் கட்டஹாரா கிராமத்தைச் சேர்ந்த வித்யா 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி வித்யாவிற்கு பேருந்து நடத்துநராகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா தன்னுடைய நடத்துநர் ஆசை குறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
மாணவி வித்யாவின் ஆசையைக் கேட்ட அதிகாரிகள் அதனை நிச்சயம் நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளனர். முதலில் மாணவி வித்யாவிற்கு எவ்வாறு பயணச்சீட்டு கொடுக்க வேண்டும் என்று பயிற்சி கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணி செய்ய அனுமதி அளித்தனர்.
பின்னர், அதன்படி அப்சல்பூரில் இருந்து கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் மாணவி வித்யா நடத்துநராகப் பணி செய்தார். அவருடன் நடத்துநரும் இருக்கையில், பயணிகளிடம் எங்கு செல்கிறார்கள் என்று கேட்டு, உரிய பயணச்சீட்டை வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் மாணவிக்கும், அவரின் ஆசையை நிறைவேற்றிய போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இணையவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.