புதுச்சேரி அடுத்த கருவடிக்குப்பம் மகாவீர் நகரை சேர்ந்தவர் சீனிவாச பெருமாள். மிஷின் வீதியில் துணிக் கடை நடத்தி வருகிறார். இவர் புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியில் வணிக பிரிவு இணை அமைப்பாளராக உள்ளார். இவரது கடைக்கு சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரேமவதி, செந்தில் ஆகியோர் வந்தனர். அப்போது சீனிவாச பெருமாளிடம் பேச்சு கொடுத்த இருவரும், டெல்லியில் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. அதிகாரிகள் எங்களது கட்டுப்பாட்டில் உள்ளனர். நாங்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று தங்களை பெரிய ஆள் போன்று காட்டி கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுடன் சீனிவாச பெருமாள் தொடர்பிலிருந்து வந்தார். ஒருநாள் அவருக்கு போன் செய்த பிரேமவதி, ' நாங்கள் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்துள்ளோம். முக்கியமான விஷயம் பேச வேண்டும்' என்று அழைத்தனர். இதை தொடர்ந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு சீனிவாச பெருமாள் சென்றார்.
அப்போது தங்கள் நண்பர்கள் என்று கணேசமூர்த்தி, சௌந்தர், பிரேம் ஆகியோரை சீனிவாச பெருமாளுக்கு பிரேமவதி அறிமுகம் செய்து வைத்தார். ' புதுச்சேரி அரசுக்கு வருமானம் அதிகம் கொடுப்பது கலால்துறை. இந்த கலால் துறைக்கு சேர்மன் பதவி இருக்கிறது. இதற்கு மதிப்பு அதிகம். இதை வாங்க பலரும் கையில் பணம் வைத்து கொண்டு வரிசையில் நிற்பதாகவும், பழகிய நபர் என்பதால் உங்களுக்கு அந்த பதவியை வாங்கி கொடுக்க நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். இது தொடர்பாக டெல்லி அதிகாரிகளிடம் பேசி ஒப்புதல் வாங்கி விட்டோம். இந்த சேர்மன் பதவி உங்களுக்கு வந்து விட்டால், வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம்' என்று ஆசை வார்த்தை கூறினார்.
இதில் மயங்கிய போன சீனிவாச பெருமாள், கலால்துறை சேர்மன் கனவில் மிதக்க ஆரம்பித்தார். இதற்காக ரூ. 26 லட்சம் பணம் கேட்டது சென்னை கும்பல். இதற்கு சம்மதம் தெரிவித்த சீனிவாசபெருமாள், வங்கி கணக்கு மூலம் செந்திலுக்கு ரூ 15 லட்சம் அனுப்பி வைத்தார். மேலும் பிரேமவதி கையில் ரூ 11 லட்சம் பணத்தை கொடுத்தார். இதை பெற்றுக்கொண்ட அந்த கும்பல், இன்னும் ஒரு வாரத்தில் ஆர்டர் காப்பி வந்து விடும். அதன் பிறகு நீங்கள் பதவி ஏற்று கொள்ளலாம் என்று கூறி விட்டு சென்னை சென்றது. ஒரு வாரத்திற்கு பிறகு எந்த வித ஆர்டரும் வரவில்லை. இதையடுத்து பிரேமவதியை தொடர்பு கொண்டு கேட்ட போது சரியான பதில் கூறவில்லை. பின்பு சென்னை சென்று தேடிய போது அவர்கள் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாச பெருமாள், சம்பவம் குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பேரில் சென்னையைச் சேர்ந்த பிரேமவதி, செந்தில், கணேசமூர்த்தி, சௌந்தர், பிரேம் ஆகியோர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.