Skip to main content

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அதிகாரபூர்வமாக ஐக்கியமாகும் சிவசேனா?

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

sanjay raut - rahul gandhi

 

2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. அண்மையில் மும்பை சென்று மஹாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் அம்மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்த மம்தா, “ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று எதுவும் இல்லை” என தெரிவித்தார்.

 

இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மம்தா தலைமையில் மூன்றாவது அணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியது. இந்தநிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னா, ‘காங்கிரஸை தேசிய அரசியலிலிருந்து ஒதுக்கிவைத்து அரசியல் செய்வது இன்றைய பாசிசப் போக்கை வலுப்படுத்துவது போன்றது’ என்றும், ‘பலமான எதிர்க்கட்சி கூட்டணியை விரும்புபவர்கள் தாங்களாகவே முன்வந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். டெல்லியில் தற்போதுள்ள அரசியல் அமைவை உண்மையிலேயே விரும்பாதவர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்துவதை ஒரே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்’ என்றும் தெரிவித்திருந்தது.

 

இந்தச் சூழலில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத், இன்று (07.12.2021) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும், நாளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியையும் சந்திக்கவுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

மேலும் இந்த சந்திப்புகளில், சிவசேனாவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அதிகாரபூர்வமாக இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்