படேல் சமூக மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக கடந்த 2015ஆம் ஆண்டு தொடர் போராட்டம் நடத்தியதன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றவர் ஹர்திக் படேல். 29 வயதேயான இவர், 2020ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். குஜராத் மாநில காங்கிரஸின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அகில இந்திய தலைவர் சோனியா காந்திக்கு அண்மையில் கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து, காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் படேல், இன்று பாஜகவில் இணைந்தார்.
குஜராத்தில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் இணைந்த ஹர்திக் படேல், ”உலகத்தின் பெருமையாக பிரதமர் மோடி இருக்கிறார். நான் சிறு சிப்பாயாக எனது வேலையை செய்யவிருக்கிறேன்” எனத் தெரிவித்தார். மேலும், காங்கிரஸில் உள்ள எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகளை பாஜகவில் இணையவைக்க 10 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு இறுதியில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹர்திக் படேலின் விலகல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்குமென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.