நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அதே சமயம் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சஞ்சய் நிருபம் ஆவார். மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களை சிவசேனாவின் உத்தவ் அணி தன்னிச்சையாக அறிவித்திருந்தது. சமீபத்தில் இது குறித்து சஞ்சய் நிருபம் பேசுகையில், “ சிவசேனாவின் உத்தவ் அணியின் இத்தகைய செயல் மும்பையில் காங்கிரஸ் கட்சியை ஒழிக்கும் சதி. மும்பையின் வடக்கு தொகுதி பற்றி ஒரு வார காலத்திற்குள் முடிவு செய்ய வேண்டும்” என அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து 6 ஆண்டுகளுக்கு சஞ்சய் நிருபம் நீக்கப்பட்டார். தற்போது 6 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.