துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட், காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையிலான பதிவு ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள சூழலில், அசோக் கெலாட் ஆட்சியைக் கவிழ்க்க முயல்வதாகக் கூறி சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.
நேற்று காலை அசோக் கெலாட் வீட்டில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும், இன்று காலை சொகுசு விடுதியில் நடைபெற்ற எம்.எல்.ஏ க்கள் கூட்டத்திலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவில்லை. அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் ஜெய்ப்பூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், சச்சின் பைலட்டின் ஆதாராளர்கள் வேறொரு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
இருவருக்கும் இடையேயான சமாதான பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் சூழலில், தனது ட்விட்டர் பக்கத்தில் சில மாறுதல்களைச் செய்துள்ளார் சச்சின் பைலட். தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் என்று பதிவிட்டிருந்ததை நீக்கிவிட்டு டாங்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்பதை மட்டும் வைத்துள்ளார். மேலும், பதவி நீக்கத்திற்குப் பிறகுத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ள அவர், "உண்மையைத் தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.