சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை, ஐப்பசி மாத பூஜை இறுதி நாளை முன்னிட்டு நடை நேற்று சாத்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் நுழையலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனை அடுத்து சபரிமலைக்குள் நடை திறக்கப்பட்ட பின்னர், சில பெண்கள் கோவிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசிக்க முயன்றனர். ஆனால், இதுவரை அது நிறைவேறவே இல்லை. பத்தினம்திட்ட மற்றும் நிலக்கல் ஆகிய இரு வழிகளால் எளிதாக பம்பைக்கு சென்றுவிட முடியும் என்பதால் பக்தர்கள் அந்த வழியையே தேர்வு செய்வார்கள். அதை தெரிந்துகொண்டு அனைத்து வயது பெண்களும் உள்ளே நுழைய கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பவர்கள் அந்த இடங்களில் வரும் குறிப்பிட்ட வயது பெண்களை தடுத்து நிறுத்தினர்.
ஐயப்பன் கோவிலின் நடை சாத்த உள்ள இறுதி நாளான நேற்றும் பிந்து என்ற பெண் போலிஸ் பாதுகாப்புடன் உள்ளே நுழைய முயன்றார். ஆனால், பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் அது முடியாமல் போனது. கடந்த ஐந்து நாட்களில் 15 பெண்கள் சபரிமலைக்குள் உள்ளே நுழைய முயன்று தோல்வி அடைந்தனர். குறிப்பிட்ட வயது பெண்கள் யாரும் உள்ளே நுழையவிடாமல் ஐயப்பன் கோவிலின் நடை சாத்தப்பட்டுள்ளது.