கடந்த 2016ஆம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைகழகத்தில் பிஎச்டி பயின்று வந்த ரோஹித் வெமுலா சாதி அடக்குமுறையினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதேபோல பாயல் தட்வி என்ற மருத்துவம் பயிலும் மாணவியும் சாதிய ஒடுக்குமுறையின் காரணமாக கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சாதிய ஒடுக்குமுறைகள் தடுக்கப்பட வேண்டும். மேலும், பல்கலைக்கழகங்களில் சமத்துவத்தை நிலை நிறுத்த ஒரு குழுவையும் அமைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தட்வி ஆகியோரின் தாயார் இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். |
இந்நிலையில், அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, யுஜிசி விதிமுறை நடைமுறையில் இருக்கும்போது, இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், யுஜிசி விதிமுறைகள் இருந்தும் அவை அமல்படுத்தவில்லை என்றார். 288 பல்கலைக்கழகங்களில் சமத்துவ கமிஷன்கள் நியமிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், மத்திய அரசுக்கு 4 வாரங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.