சாலை விபத்துக்களில் ஒரு மணிநேரத்திற்கு 17 பேர் உயிரிழப்பதாக தகவல்!
கடந்த 2016ஆம் ஆண்டிற்கான சாலைவிபத்துகள் குறித்த அறிக்கையில், ஒரு மணிநேரத்திற்கு 17 பேர் உயிரிழப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தரப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 2016ஆம் ஆண்டு 4,80,652 சாலைவிபத்துகள் நடந்துள்ளதாகவும், இதில் சிக்கிய காயமடைந்த 4,94,624 பேர்களில் பலத்த காயங்களால் 1,50,785 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4.1% குறைந்திருந்தாலும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் 3.2% அதிகரித்துள்ளது. அதாவது ஒருநாளில் சராசரியாக 400 பேர் சாலைவிபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். ஒரு மணிநேரத்தில் சராசரியாக நிகழும் 55 சாலைவிபத்துகளில் 17 பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் பாதிபேர்(46.3%) 18 - 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர்.
ஒட்டுமொத்த சாலைவிபத்துகளில் கிட்டத்தட்ட 90%க்கும் மேற்பட்டவை ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஏற்பட்டவையாக இருக்கின்றன. மொத்த விபத்துகளில் 86% தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய தென்மாநிலங்கள் உட்பட 13 மாநிலங்களில் நிகழ்ந்தவை. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்