
சமூக ஊடகங்களில் ரெனால்ட்ஸின் பிரபலமான நீல நிற மூடியுடன் கூடிய பேனா தயாரிப்பு நிறுத்தப்படப் போவதாக வைரலானதை அடுத்து ரெனால்ட்ஸ் நிறுவனம் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பெயர்பெற்ற பேனா உற்பத்தியாளரான ரெனால்ட்ஸின் பிரபலமான 045 ஃபைன் கார்பர் பேனாவின் உற்பத்தியை நிறுத்துவது குறித்த வதந்திகளை நிர்வாகம் தரப்பில் நிராகரித்துள்ளனர். இந்த பேனா சச்சின் டெண்டுல்கர் பேனா என்றும் மக்கள் மத்தியில் அழைப்பதுண்டு. இதற்கு காரணம், இந்தப் பேனாவின் விளம்பரத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நடித்திருந்தார்.
இந்த பேனா குறித்தான பதிவு வைரலானதைத் தொடர்ந்து. பலரும் தங்களின் பால்ய கால பள்ளி, கல்லூரிப் பருவங்களை நினைவுகூர்ந்து நெகிழ்வாக பதிவிட்டு வருகின்றனர். சிறுவயதில் இருந்தே இந்த பேனாவைப் பயன்படுத்தும் மக்கள் தங்களது ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். சிலர் பேனாவுடனான தேர்வு நிகழ்வுகள் பற்றியும் பேனாவின் சிறப்புகள் பற்றியும் பதிவிட்டனர். குறிப்பாக 90’ஸ் கிட்ஸுக்கும் இந்த பேனாவிற்கும் இதயம் கடந்த உறவு இருக்கும். அதனால் இப்படி நெகிழ்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
இதற்கு ரெனால்ட்ஸ் நிறுவனம் ட்விட்டரில், "சமீபத்தில் வெளியான தவறான தகவலை, நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்: பரப்பப்படும் தகவல் தவறானது. உண்மையான மற்றும் துல்லியமான அறிவிப்புகளுக்கு எங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பார்க்குமாறு எங்கள் பார்ட்னர்கள், பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்" என பதிவிட்டிருந்தனர்.
இதனூடே ஒரு அறிவிப்பையும் வெளியிட்டனர். அதில், "எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் பார்ட்னர்களுக்கு: பல்வேறு ஊடகங்களில் ரெனால்ட்ஸ் பற்றிய சமீபத்திய தகவல்கள் தவறானவை மற்றும் சரியானதல்ல. இந்தியாவில் 45 ஆண்டுகால பாரம்பரியத்துடன் இயங்கக்கூடிய ரெனால்ட்ஸ், தரமான கண்டுபிடிப்புகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியாவில் எழுத்து வணிகத்தை விரிவுபடுத்தவும் வளரவும் வலுவான எதிர்காலத் திட்டம் எங்களிடம் உள்ளது. துல்லியமான தகவல்களுக்கு எங்கள் வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பார்க்க அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநிறுத்துவது எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. உங்கள் தளராத ஆதரவுக்கு நன்றி" என தெரிவித்திருந்தனர்.