“நாங்க ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரி இல்ல. இந்த நிறுவனத்தோட ஊழியர்கள். எங்களிடம் மரியாதையா பேசுங்க” என தன்னை வேலைக்காரி என அழைத்த விமானப் பயணியை, நடுவானில் வைத்து லெப்ட் ரைட் வாங்கிய பணிப் பெண்ணின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி வழியாகச் செல்லும் விமானம் ஒன்று, கடந்த 16 ஆம் தேதியன்று வானத்தில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு, அந்த விமானப் பணிப்பெண்கள் தங்களது சேவைகளை வழங்கி வந்தனர். அந்த சமயத்தில், அதே விமானத்திலிருந்த பயணி ஒருவருக்கு உணவைத் தேர்ந்தெடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, அந்தப் பயணி அங்கிருந்த பணிப் பெண்ணை வேலைக்காரி என அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விமானப் பணிப் பெண், எங்களை ஏன் அப்படி அழைக்கிறீர்கள் என அந்தப் பயணியிடம் மரியாதையாகக் கேட்டுள்ளார். அப்போது, அந்தப் பயணி, அந்தப் பணிப் பெண்ணைப் பார்த்து வாய மூடு எனக்கூறி சத்தம் போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் உச்சக்கட்ட கோபத்திற்குச் சென்ற அந்தப் பணிப் பெண், நீங்கள் வாய மூடுங்க. எங்ககிட்ட இந்த மாதிரி பேசாதீங்க. நாங்க ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரி இல்ல. நாங்க இந்த நிறுவனத்தோட ஊழியர்கள். மரியாதையா பேசுங்க. எங்களிடம் கையை நீட்டி பேசாதீங்க" என அந்தப் பணிப் பெண் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
இதனால், அந்த விமானத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேலும், இத்தகைய சம்பவங்களை அங்கிருந்த மற்றொரு பயணி, தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாவில் லீக் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அந்தப் பணிப் பெண்ணுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெட் ஏர்வெஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சீவ் கபூர், இந்த வீடியோவை ரீ ட்வீட் செய்துள்ளார். அப்போது, அவர் கூறும்போது "விமானப் பணிப் பெண்களும் நம்மளைப் போல சாதாரண மனிதர்கள்தான். விமானப் பணிப் பெண்களை, வேலைக்காரி போல நடத்துவதை நான் பலமுறை பார்த்துள்ளேன்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.