ஜி.எஸ்.டி வரி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, சரக்குப் போக்குவரத்தை எளிமைப்படுத்த மத்திய அரசு ஈ-வே பில் முறையை கொண்டுவந்தது. இதன் மூலம் ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கு ரூ.50,000 அல்லது அதற்கு மேலான மதிப்புடைய பொருள்களை கொண்டுசெல்லும்போது ஈ-வே பில் கட்டாயமாக்கப்பட்டது.
இது கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறையில் உள்ளது. இது நடைமுறைக்கு வந்ததில் இருந்தே போலி ஈ-வே பில், போலி இன்வாய்ஸ்கள் தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இது வரையில் போலி ஈ-வே பில் மூலம் ரூ5,000 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது, போலி ஈ-வே பில் மற்றும் போலி இன்வாய்ஸ்களை கண்டுபிடிக்கத் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிட பிரத்யேக குழு ஒன்றை அமைக்க மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்தக் குழுவில் மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.