தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. மிசோரத்திற்கு மட்டும் கடந்த 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதனையடுத்து, தெலங்கானா மாநில முதலமைச்சராக, தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்பார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்திருந்தார். அதன்படி, மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று (07-12-23) பதவியேற்றார். அவருடன் சேர்த்து, 10 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த நிலையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி பதவியேற்ற மேடையிலேயே, மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.
தெலங்கானா சட்டசபை தேர்தலுக்கு முன், ஹைதராபாத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ரஜினி என்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தி மனு ஒன்றை அளித்தார். அவர் அளித்த அந்த மனுவில், 'ஹைதராபாத்தில் உள்ள நாம்பல்லி தொகுதியை சேர்ந்த இவரின் தந்தை வெங்கடேஷன் ஓய்வு பெற்ற 4ஆம் நிலை அரசு ஊழியர். மாற்றத்திறனாளியான இவர் பட்டப்படிப்பு வரை படித்துள்ளார். இருந்தாலும், இவருக்கு யாரும் வேலை கொடுக்க மறுத்துள்ளனர். அதனால், இவரது குடும்பம் வறுமையில் வாடுவதாக' குறிப்பிட்டிருந்தார். அதற்கு ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு வேலை வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று (07-12-23) தெலுங்கானாவில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு, அந்த மாற்றுத்திறனாளி பெண்ணான ரஜினிக்கு, ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து, முதல்வராக பதவியேற்ற ரேவந்த் ரெட்டி, ரஜினியை மேடையில் அழைத்து அவருக்கு அரசு வேலைக்கான நியமன உத்தரவை வழங்கினார். முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.