கரோனா மற்றும் ஒமிக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால், கேரளா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, மேற்கு வங்க மாநில அரசு, மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்படுவதாகவும், மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நாளை (03/01/2022) முதல் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தபடுவதாக அம்மாநில தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், "மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நாளை (03/01/2022) முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது; எனினும், நிர்வாக ரீதியான பணிக்கு 50% பணியாளர்களுடன் அலுவலகம் செயல்படலாம். அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும். மக்கள் வாகனங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீச்சல் குளங்கள், ஜிம்கள், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் மற்றும் விலங்கியல், பொழுதுபோக்கு பூங்காக்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணம், வரவேற்பு மற்றும் அதன் சம்மந்தமான நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் 50% பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கில் 20 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், மார்க்கெட் காம்ப்லெக்ஸ் கடைகள், உணவகங்கள், திரையரங்குகள், பார்கள் 50% பேருடன் இரவு 10.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் நாளை (03/01/2021) முதல் வரும் ஜனவரி 15- ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தனியார் நிறுவனங்கள் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட மினி லாக்டவுன் போன்று மேற்கு வங்க அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.