இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் பரபரப்பான சூழலில் நடைபெற்றவரும் நிலையில், இன்று (08.12.2021) காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, விவசாயிகள் பிரச்சனை, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியது வருமாறு,
“விவசாயிகளின் ஒற்றுமை, விடாமுயற்சி, அவர்களின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை ஒரு திமிர்பிடித்த அரசாங்கத்தை இறங்கி வர வைத்துள்ளது. அவர்களின் ஆகப்பெரும் சாதனைக்காக அவர்களுக்கு வணக்கம் செலுத்துவோம். கடந்த 12 மாதங்களில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரமரணம் அடைந்துள்ளனர் என்பதை நினைவில்கொள்வோம். அவர்களின் தியாகத்தைக் கவுரவப்படுத்துவோம்.
சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை, சாகுபடி செலவுகளுக்கு ஏற்ற லாபமான விலை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ஆகிய விவசாயிகளின் கோரிக்கைகளில் அவர்களுடன் நிற்பது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மோடி அரசு எப்படி, ஏன் இவ்வாறு உணர்வற்று இருக்கிறது என்பதையும், ஏன் பிரச்சனையின் தீவிரத்தை தொடர்ந்து மறுக்கிறது என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது மக்கள் படும் இன்னல்களைப் பொருட்படுத்தாதது போல் தெரிகிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைக்க சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலும் போதுமானதல்ல. நடவடிக்கை எடுக்க அதற்கு அதிக இடமிருக்கும்போதும் வழக்கம்போல், வரி குறைப்புக்கான பொறுப்பை நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசுகளிடம் மத்தி அரசு ஒப்படைத்துள்ளது. 100 கோடி தடுப்பூசி செலுத்தியதை அரசாங்கம் கொண்டாடியது, ஆனால் அது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்காக என்று அரசு கூறவில்லை. ஆண்டு இறுதிக்குள் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கிற்கு பக்கத்தில் கூட நாடு இல்லை. முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவு. ஆண்டு இறுதிக்குள் 60 சதவீத மக்கள் தொகைக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென்றாலும், தினசரி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும்.” என்றார்.