பல்கலைக் கழகங்களில் முறையாக நிரப்பப்படாத மாற்றுத் திறனாளிகள் இடஒதுக்கீடு!
இந்தியாவில் உள்ள முக்கியமான பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு, முறையாக நிரப்பப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஐஐடி, ஐஐஎம், ஜே.என்.யூ., டெல்லி பல்கலை. உட்பட இந்தியாவில் இருக்கும் முக்கியமான 32 பல்கலைக் கழகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு முறையாக நிரப்பப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995-ன் படி அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதை முறையாக செயல்படுத்த அரசு தவறிவிட்டது.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படும் அமைப்பு நடத்திய ஆய்வில், ஒட்டுமொத்தமாக 3.33 லட்சம் மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 0.48%-தான். மேலும், அவர்களில் பெண் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 28% அல்லது கால் பங்குதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும்போது, சட்டமும் அரசும் அர்த்தமற்றதாய் மாறுகின்றன என ஆய்வு நடத்திய அமைப்பின் கவுரவ இயக்குனர் ஜாவித் அபிதி வருத்தம் தெரிவித்துள்ளார்.