Skip to main content

டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? - ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 18/11/2024 | Edited on 18/11/2024
Doctor Rajendran interview

‘நக்கீரன் நலம்’ சேனல் வாயிலாக ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன்  பல்வேறு நோய்களைப் பற்றியும் அந்த நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வதைப் பற்றியும் பேசி வருகிறார். அந்த வகையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதைப் பற்றிய மருத்துவ ஆலோசனைகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.

மழைக் காலத்தில் மனிதர்களுக்கு அதிகம் வரக்கூடிய காய்ச்சல்கள் டெங்கு, பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் தான். இதில் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம் ஏனென்றால் அந்த காய்ச்சலுக்கு ஒரு வாரக் காய்ச்சல் என்று பெயர். டெங்கு காய்ச்சல் வந்த 95% நோயாளிகளுக்கு பெரும் அளவில் பாதிப்பு ஏற்படுவது இல்லை. 5% நோயாளிகள்தான் ஆபத்தான கட்டத்திற்கு போகின்றனர். எனவே டெங்கு காய்ச்சல் வந்த பிறகு அந்த 95% நோயாளிகளில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கவனக் குறைவாக இருக்கக் கூடாது.

டெங்கு காய்ச்சல் வாரத்தில் 7 நாட்கள் கண்டிப்பாக இருக்காது. அதிகபட்சமாக மூன்று நாட்கள் காய்ச்சல் இருக்கும். அதில் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில் உடல் வெப்பம் 102°F மற்றும் 103°F இருக்கும். அந்த மூன்று நாட்களில் முதலில் காய்ச்சலுக்கான மாத்திரைகளை உட்கொண்ட பிறகு காய்ச்சல் நார்மலானதுபோல் இருக்கும். உடனே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடல்நிலை சரியாகி விட்டது என்று நினைப்பார்கள். இப்படி நினைப்பது மிகவும் தவறானது. ஏனென்றால் டெங்கு காய்ச்சலில் நிறையப் பகுதிகள் இருக்கிறது.

ஆரம்பக்கட்ட பகுதியாக அதிக உடல் வெப்பநிலையுடன் காய்ச்சல் வரும். எல்லாவிதமான வைரஸ் காய்ச்சலுக்கும் இப்படித்தான் ஏற்படும். அந்த மூன்று நாட்களில் நார்மலான பிறகு. அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருந்தால் முதலில் நீர்ச்சத்து குறைவு ஏற்படும். அதனால் இரத்தத்தின் திரவ நிலையில் மாற்ற ஏற்பட்டு இரத்தம் இறுக தொடங்கும். அதன் பிறகு இரத்தத்தில் பிளாஸ்மா லீக் ஏற்படும். பின்பு இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். தொடர்ந்து வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதனால் மற்ற உள்ளுறுப்புகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படிப் பல பகுதிகளாக டெங்கு காய்ச்சல் தீவிரமடையும்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் போக வேண்டுமென அதிகளவில் பாராசிட்டமால் எடுத்துக்கொண்டால் கல்லீரல் பிரச்சனைகள் ஏற்பட நேரிடும். மருத்துவர்களின் ஆலோசனையின்படி பாராசிட்டமால் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். முடிந்தளவு மாத்திரை இல்லாமல் காய்ச்சலைக் குறைக்க கூடிய ஆலோசனைகளை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து செயல்பட வேண்டும். உதாரணத்திற்கு ஈரத்துணியை பிழிந்து நெற்றி, நெஞ்சு, கால் உள்ளிட்ட பகுதிகளில் வைத்தால் உடல் வெப்பத்தைக் குறைக்க முடியும். இரத்தம் இறுகிப் போகும் தன்மையைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவதன் மூலம் டெங்கு காய்ச்சலிருந்து தப்பித்துக்கொள்ளமுடியும்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஏனென்றால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சில நேரங்களில் அதிகளவு மாதவிடாய் ஏற்படும்.  ஆண் மற்றும் பெண் இருவருக்கும் வேகமாக பிளேட்லெட் எண்ணிக்கை குறையும். இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதன் மூலம் அதற்கேற்ப சிகிச்சையளிக்க ஏதுவாக இருக்கும். பப்பாளி, மாதுளை, ஆப்பிள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் நீர்ச்சத்து குறைபாட்டையும் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவையும் தடுக்கலாம். டெங்கு காய்ச்சல் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கும் ஏடிஸ் கொசு நல்ல தண்ணீரில்தான் முட்டையிடும். அதனால் நல்ல தண்ணீரை தேக்கி வைக்காமல் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.