ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.
கூட்டணி ஆட்சி என்பது உறுதியான நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும், பீகாரின் நிதிஷ்குமார் இடம்பெற்றுள்ளனர். இருவரும் பல்வேறு கோரிக்கைகளை பாஜக தலைமையிடம் வைத்திருக்கும் நிலையில் இருவரின் கோரிக்கைகளில் முதலாவது கோரிக்கை என்பது தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்பதாகவே உள்ளதாம்.
இந்த கோரிக்கை நீண்ட நாள் கோரிக்கையாகவும் உள்ளது. ஆந்திராவை தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரித்ததால் அதன் தலைநகர் ஐதராபாத் தெலுங்கானாவிற்கு சென்றுவிட்டது. எனவே தங்களுடைய மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அதேபோல பீகாரில் இருந்து ஜார்க்கண்ட் பிரிக்கப்பட்டதால் நாங்கள் தொழில் வளர்ச்சிகள் இல்லாமல் பின்தங்கி உள்ளோம் எனவே பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என நிதீஷ் கேட்டுள்ளார்.
சிறப்பு அந்தஸ்து என்பது ஒரு மாநிலத்திற்கு கிடைத்தால் ஐந்து ஆண்டுகளில் மாநில வளர்ச்சிக்கு 2.5 லட்சம் கோடி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மலைப்பிரதேசங்களில் உள்ள பகுதி; குறைந்த மக்கள் தொகை; பழங்குடி மக்கள் நிறைந்த பகுதி; பக்கத்து நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள்; பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்படும் நடைமுறை உள்ளது. சொல்லப்போனால் மத்திய அரசின் செல்லப்பிள்ளைகளாக சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்கள் இருக்கும். அந்த வகையில் 370 பிரிவு நீக்கப்படும் வரை ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து கொண்ட மாநிலமாக இருந்தது. தற்போது இந்தியாவில் 11 மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்துடன் இருக்கின்றன. இந்நிலையில் பீகாரும், ஆந்திரப் பிரதேசமும் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என பாஜக தலைமையிடம் வலியுறுத்தி வருகிறது.