கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமச்சேரி பகுதியில் ஜெகோபா வழிபாட்டுக் கூட்டத்தில் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களமச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் குண்டுவெடிப்பு குறித்து மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடக்கரா காவல்நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்கட்ட விசாரணையில் அவர் முரணான தகவல்களை தெரிவித்ததால் நேரடியாக டொமினிக் மார்ட்டின் வீட்டிற்கே சென்ற போலீசார் அங்கு இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதேபோல் ரிமோட் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். அதன் அடிப்படையில் டொமினிக் மார்ட்டின் டிபன் பாக்ஸில் வெடிகுண்டை மறைத்து எடுத்து வந்து ரிமோட் மூலம் இயக்கி வெடிகுண்டை வெடிக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவரது மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசில் சரணடையும் முன்பே பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதேபோல் வெடிகுண்டு வைப்பதற்காக இணையதளத்தில் ஆறு மாதங்களாக தேடித்தேடி தகவல்களை திரட்டி உள்ளதும் தெரியவந்துள்ளது. 16 ஆண்டு உறுப்பினராக இருந்ததாகவும் சபை செயல்பாடு பிடிக்காததால் குண்டு வைத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார் டொமினிக் மார்ட்டின்.